Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

ட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் சென்னையில், ஏதாவது ஒரு புயல் எச்சரிக்கை வந்தால் போதும், உடனே டப்பா டப்பாவாக பால் பாக்கெட்களை ஒரு சிலரே தூக்கிக் கொண்டு ஓடுவார்கள்.

நாளைக்கு காய்கறியே கிடைக்காது என்பது போலவும், காய்கறி இல்லாமல் மறுநாள் உயிரே வாழ முடியாது என்பது போலவும் கதறிக் கொண்டு, ஒட்டுமொத்தமாக காய்கறிகளை அள்ளிக் கொண்டு போவார்கள். கடைகளிலும், ஷாப்பிங் மால்களிலும் ஒரே நேரத்தில் பலர் முட்டிமோதி பொருட்களை வாங்க அலைமோதுவதை வாடிக்கையாகப் பார்த்து வருகிறோம். எல்லாவற்றுக்கும் காரணம், சுய நலன் என்பது மட்டுமின்றி, அறியாமையும், வதந்திகளை அப்படியே நம்பிக் கொண்டு பதற்றம் அடைவதும் தான்!

எவரோ ஒருவர், ஒரு குறிப்பிட்ட பெட்ரோ பங்கில் பெட்ரோல் போடப் போன போது, ஸ்டாக் இல்லை என்று சொல்லி விட்டார்கள் எனச் சொல்லி, பெட்ரோலே இனி கிடைக்காது, தேவைப்படும் அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று வதந்தி கிளப்பி, தெருவில் உள்ள அனைவரும் வேறு இடத்திற்குச் சென்று பெட்ரோல் போட அலைவதையும், போதாக் குறைக்கு போன் போட்டு, 'சீக்கிரம் போயி வாங்கிடு' என்று பீதியைக் கிளப்புவதையும் இப்போது பார்த்து வருகிறோம்.

பால் ஓரிரு நாள் தான் கெடாமல் இருக்கும். பத்து பாக்கெட் வாங்கி வைத்து பத்து நாட்களுக்கு ஒருவரே பயன்படுத்த முடியுமா? புயல் வந்தால் மின் தடையும் கூடவே வருமென்பது தெரியாதா என்ன? கோவிட் போன்ற மிக மோசமான காலகட்டத்தையும் கடந்து வந்திருக்கிறது நம் நாடு. அப்போதெல்லாம் எப்படி நடந்து கொண்டு இன்றளவும் நாம் ஜீவித்திருக்கிறோம் என்பதை உணர்ந்து சிந்திக்கக் கூடவா தோன்றாது!?

ஒட்டுமொத்தமாக சிலிண்டர்களை பதுக்கி வைத்து பின்னாளில் அதிக விலைக்கு விற்கலாம் என்று கணக்குப் போட்டு சிலிண்டர்களைப் பதுக்கிய இருவரை மதுரை அருகே 'அத்தியாவசியப் பொருள்கள் தடுப்புச் சட்ட'த்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். எத்தனை எத்தனை மக்கள் இப்போது கேன்களிலும், பிளாஸ்டிக் டப்பாக்களிலும் பெட்ரோலை வாங்கிக் கொண்டு ஆலாய்ப் பறக்கிறார்கள். உண்மையில், பெட்ரோல் ஆவியாகக் கூடிய தன்மை கொண்டது. ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்தால் சில நாட்களில் அனைத்தும் ஆவியாகிவிடும், பிறகு எங்கே அதை பயன்படுத்த முடியும்?!

சாதாரணமாக கேன்களில் அவசரத் தேவைக்குக் கூட பெட்ரோலைத் தரமாட்டார்கள். ஆனால் தமிழகத்திலோ இப்போது லாரிகளிலும், டிரம்களிலும் 500 லிட்டர் பிடிக்கும் தண்ணீர் டின்களிலும் அல்லவா பெட்ரோலை வாங்கிக் கொண்டு செல்வதாக செய்திகள்!

இந்திய சட்டப்படி பெட்ரோல் பங்குகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத கேன்களில் பெட்ரோல் அல்லது டீசல் விற்பனை செய்வது சட்டவிரோதமானது. இது 1934 ஆம் ஆண்டின் பெட்ரோலியச் சட்டம் (Petroleum Act, 1934) மற்றும் 2002 ஆம் ஆண்டின் பெட்ரோலிய விதிகள் (Petroleum Rules, 2002) ஆகியவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது.

முக்கிய சட்டங்கள் மற்றும் தண்டனைகள் :

குற்றம்: அங்கீகரிக்கப்படாத பாத்திரங்களில் எரிபொருளை நிரப்புவது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி தடையாகும்.

தண்டனை: விதிகளின்படி, இந்தத் தடையை மீறினால் ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். கடுமையான விதிமீறல்களுக்கு சிறைத்தண்டனை சுமார் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

நிர்வாக நடவடிக்கை: விதிமீறலில் ஈடுபடும் பெட்ரோல் பங்கின் உரிமம் ரத்து செய்யப்படலாம் அல்லது விற்பனை இடைநிறுத்தம் செய்யப்படலாம்.

ஏன் பெட்ரோல் பாட்டில்களில் தரப்படுவதில்லை?

தீ விபத்து அபாயம்: பிளாஸ்டிக் பாட்டில்கள் பெட்ரோலின் வேதியியல் தன்மையால் உருகலாம் அல்லது வெடிக்கலாம். இது மிக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள் என்பதால் பொதுப் பாதுகாப்பிற்காக இந்தத் தடை உள்ளது.

சட்டம் ஒழுங்கு: குற்றச் செயல்களுக்கு (எடுத்துக்காட்டாக பெட்ரோல் குண்டு தயாரித்தல்) பெட்ரோல் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது இத்தடையை கடுமையாக்குகிறது.

கள்ளச்சந்தை: பெட்ரோல் பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு வெளியில் விற்பனை செய்வதைத் தடுக்கவும் இது உதவுகிறது

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari