நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில் மூன்று பாடல்கள் இசைக்கப்பட்டது மிக அருமையாக இருந்தது.
வந்தே மாதரம் (தேசியப் பாடல்), ஜனகணமன (தேசிய கீதம்), நீராரும் கடலுடுத்த (தமிழ்த்தாய் வாழ்த்து) என்ற அந்த வரிசையும் மிகச் சரியானது. அனாவசியமாக இதைக் குறித்து வேண்டாத பிரசினையைக் கிளப்பி, பதவியேற்பு விழாவில் ஏதோ பெரிய 'அபசாரம்' நடந்து விட்டது என்ற ரீதியில் கூச்சலிடும் இரண்டு-எம்.எல்.ஏ சில்லறைக் கட்சிகளின் அற்பத் தனமான எதிர்ப்புகளை எல்லாம் உண்மையில் முதல்வர் விஜய் அரசு பொருட்படுத்தத் தேவையே இல்லை.
ஆனாலும், இதை ஏதோ ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, 'கவர்னர் தரப்பில் மத்திய அரசின் நெறிமுறைகள் வலியுறுத்தப்பட்டு இது நடந்தது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப் படுவதில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை. இனி இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது' என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார். இதற்கு எந்த அவசியமும் இல்லை.
ALSO READ:எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!
முதலில் தேசம், அதற்குப் பின்பு தான் மொழி, மாநிலம் எல்லாம். நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியில் கூட இந்தியா தான் முதலில் வந்தது. அதன்பிறகு தான் 'தமிழ்நாட்டின்' என்று வந்தது. அதே வரிசை தான் பாடலிலும் பின்பற்றப் பட்டது.
'தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த பெருமிதம் உள்ளது' என்கிறார் அமைச்சர். வந்தே மாதரம் பாடலுக்கு அதற்கும் முந்தைய, அதைவிடவும் பெரிய தேசியப் பெருமிதமும் பாரம்பரியமும் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். சமீபத்தில் தான் வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் அமைப்பே எப்படி இருக்கிறது? அது 'நிலமடந்தை' என்று முதலில் பூமித்தாயைக் கூறுகிறது. 'வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்' என்று இரண்டாவதாக பாரத நாட்டை அவளது திருமுகம் என்கிறது. மூன்றாவதாகத் தான் 'தக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்று தமிழ்நாட்டை அவளது திருநெற்றியாகவும், நான்காவதாக 'தரித்த நறும் திலகமுமே' என்று தமிழ்மொழியை அவளது நெற்றித் திலகமாகவும் கூறுகிறது. எனவே, விழாவில் பாடல்கள் பாடப்பட்ட வரிசையும் இதை ஒட்டியே தான் அமைந்திருந்தது. இதற்கு மாறாக அல்ல.
உண்மையில் வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. இரண்டு பாடல்களுமே வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கின்றன. 'மாதா பூமி: புத்ரோஹம் ப்ருதிவ்யா' என்ற வேதரிஷியின் பிரகடனத்தின் எதிரொலிகள் தான் இந்த இரண்டு பாடல்களும் என்பதை உணரவேண்டும்.
வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்ற பாரதியாரின் மகத்தான வரிகளில், வரிசை தமிழிலிருந்து தொடங்கி பாரதத்திற்குச் செல்கிறது. ஆனாலும், உணர்வு ஒன்றுதான்.
இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும் என்பதே அதற்கு வாக்களித்த பெருவாரியான தமிழ்நாட்டு மக்களின் அவா. திராவிட இயக்கத்தின் பிரிவினைவாதப் பிசாசுகள் ஒழிந்ததாகவே இருக்கட்டும். அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டாம்.
ALSO READ:இந்திய மண்ணில் சிக்கிய சிஐஏ ஏஜெண்ட்! மணிப்பூர், மிசோரம்... என்ன நடக்குது இங்கே!
