தலைப்பு செய்திகள்
சிட்னியில் நடத்திய போராட்டம் அனுபவத்தை பகிரும் அஷ்வின்


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி மகத்தான சாதனை படைத்தது. இதில் சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணி கடுமையாக போராடி 'டிரா' செய்தது. சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 272 ரன்களுடன் திணறிய போது 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஹனுமா விஹாரியும், தமிழகத்தை சேர்ந்த அஸ்வினும் காயத்தையும் பொருட்படுத்தாமல் 258 பந்துகளை சமாளித்து புதிய அத்தியாயம் படைத்ததுடன் போட்டியையும் டிரா செய்ய வைத்தனர்.
விஹாரி 23 ரன்னுடனும் (161 பந்து), அஸ்வின் 39 ரன்னுடனும் (128 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த டெஸ்ட் குறித்து அஸ்வின் தனது அனுபவத்தை யுடியுப் சேனலில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதருடன் கலகலப்பாக கலந்துரையாடினார். அப்போது அஸ்வின் கூறியதாவது:- ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்சின் பந்து வீச்சில் அடிவாங்காமல் விளையாடவே முடியாது. அவரது பவுன்சர் பந்துகள் வேறு விதமாக இருக்கும். நான் விஹாரியிடம், 'கம்மின்ஸ் பந்து வீச்சில் உடலில் எல்லா இடத்திலும் அடி வாங்கி விட்டோம். இனி எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம். தடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்து போதும், உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடி வாங்கிக் கொள், பந்தை ஸ்டம்புக்குள் மட்டும் விட்டுவிடாதே' என்று கூறினேன்.
நாங்கள் ஒன்றிரண்டு ரன் வீதம் எடுத்து பேட்டிங் முனையை மாற்றாமல் தொடர்ந்து ஒரே மாதிரி பேட்டிங் செய்வதை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ரொம்ப நேரம் அறியாமல் குழம்பி போனார்கள். காயத்தால் நாங்கள் பந்தை அடிக்கவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், ஒருவரால் முன்னே சென்று விளையாட முடியாது. இன்னொருவருக்கு உடலில் அடிபடுகிறது. அதனால் கொஞ்ச நேரம் இப்படியே முனையை மாற்றாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்று நினைத்து ஆடினோம். நான் கடுமையான முகுதுவலியால் அவதிப்பட்டேன்.
என்னால் நகரக்கூட முடியவில்லை. ஆஸ்திரேலிய பவுலர்கள் தொடக்கத்திலேயே சற்று எழும்பி வரும் வகையில் பந்து வீசியிருந்தால் பேட்டின் விளிம்பில் பட்டு கேட்ச்சாக மாறியிருக்கும். விக்கெட்டை இழந்திருப்பேன். ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் அவ்வாறு செய்யாமல் தவறு செய்து விட்டனர். அவர்கள் உடலில் தாக்குதலை தொடுத்து அச்சுறுத்தி விக்கெட்டை பறித்து விடலாம் என்று நினைத்தனர். ஆனால் எனக்கும், விஹாரிக்கும் உடலில் அடி விழும் போது இன்னும் துணிச்சலாக எதிர்த்து நின்று மல்லுகட்டினோம். இதே போல் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் என்னை வார்த்தைகளால் சீண்டினார். அவர்கள் கடைசிகட்ட யுக்தியை கையாள்கிறார்கள் என்று பேசிக்கொண்டோம். அதனால், உங்களால் என்ன முடியுேமா செய்து பாருங்கள் என்று கூறி விட்டோம்.
வெளியில் இருந்து (கேப்டன் மற்றும் பயிற்சியாளர்) நிறைய தகவல்கள் அனுப்பப்படும் என்று தெரியும். குளிர்பான இடைவெளியின் போது ஷர்துல் தாகூர் தகவல் சொல்ல வேகமாக ஓடி வந்தார். வந்தவர், வீரர்களின் அறையில் நிறைய விஷயங்கள் சொல்கிறார்கள். ஆனால் உங்களிடம் எதுவும் சொல்லமாட்டேன். நீங்கள் நன்றாக ஆடுகிறீர்கள். அதையே தொடர்ந்து செய்யுங்கள் என்று கூறி விட்டு திரும்பினார். ஆனால் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, நான் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு எதிராக நன்றாக ஆடியதால் என்னை ஒரு முனையில் அவரது பந்து வீச்சை எதிர்கொள்ளும்படியும், இன்னொரு முனையில் வேகப்பந்து வீச்சை விஹாரியை தொடர்ந்து சந்திக்கும்படியும் கூறி தகவல் அனுப்பியதை ஆட்டம் முடிந்த பிறகு தாகூர் என்னிடம் சொன்னார்.