Dailyhunt
110 டாலரைத் தொட்ட கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

110 டாலரைத் தொட்ட கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு!

ரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது உலக நாடுகளைப் பதற வைத்துள்ளது.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 70 அமெரிக்க டாலராக இருந்த நிலை மாறி, தற்போது 110 டாலர் வரை எகிறியுள்ளது. இந்தத் திடீர் விலை ஏற்றத்தால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இருப்பினும், இந்தியாவைப் பொறுத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படாமல் பழைய விலையிலேயே நீடிப்பது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தை மாற்றங்களைப் பொருட்படுத்தாமல் விலையை மாற்றாமல் வைத்திருக்கும் 'எரிபொருள் விலை முடக்கம்' கொள்கையை அரசு தீவிரமாகப் பின்பற்றி வருகிறது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், சாமானிய மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் தங்களது தோள்களில் அந்தச் சுமையைச் சுமந்து வருகின்றன. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வரும் சூழலில், இந்த இழப்பைச் சமாளிக்க 'சுத்திகரிப்பு மாற்றுக் கட்டணத் தள்ளுபடி' எனும் புதிய அதிரடி நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய முறையின் கீழ், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய முன்னணி நிறுவனங்கள் டீசல் மற்றும் விமான எரிபொருளைச் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன.

இந்த மாதத்தின் முதல் பாதியில் மட்டும், டீசலுக்கான சுத்திகரிப்பு கட்டணத்தில் ஒரு கிலோ லிட்டருக்கு சுமார் அறுபதாயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விற்பனை நிறுவனங்களின் நிதிச் சுமையானது சுத்திகரிப்பு நிறுவனங்களுடனும் பகிர்ந்து கொள்ளப்படுவதால், பெட்ரோல் பங்குகளில் விலை உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 90 சதவீத பெட்ரோல் பங்குகளை இந்த பொதுத்துறை நிறுவனங்களே இயக்கி வருவதால், தனியார் நிறுவனங்களின் லாப நோக்கம் கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. போர்ச் சூழலிலும் இந்தியாவின் இந்தத் தனித்துவமான மேலாண்மை முறை, மற்ற நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai