Dailyhunt
12ம் தேதி முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்!

12ம் தேதி முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்!

மிழகத்தில் கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய தொழிலாக விளங்கும் தீப்பெட்டி உற்பத்தி தற்போது கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

பாஸ்பரஸ், குளோரைடு மற்றும் மெழுகு போன்ற மூலப்பொருட்களின் விலை நாளுக்கு நாள் விஷம் போல ஏறி வருவதால் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர். குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் சூழலால் வெளிநாடுகளில் இருந்து வர வேண்டிய மூலப்பொருட்கள் வருகை பாதிக்கப்பட்டு, அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது உற்பத்தியாளர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

முன்னதாக ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட மெழுகு தற்போது 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் தொழிலை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. தீப்பெட்டி பேக்கிங் செய்யப் பயன்படும் பாலித்தீன் பைகள் மற்றும் அட்டைகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி வரும் 12-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை என இரண்டு வாரங்களுக்கு தீப்பெட்டி ஆலைகளை முழுமையாக மூடி விடுமுறை விட உற்பத்தியாளர்கள் அதிரடியாக முடிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட ஆலைகள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், இதனை நம்பியுள்ள 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதில் 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள் என்பதால் இந்த ஆலை மூடல் நடவடிக்கை பெரும் சமூக பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. மூலப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai