தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இன்று ஏப்ரல் 2ம் தேதி தென் தமிழகம் மற்றும் மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள கூடுதல் தகவலின்படி, தமிழகத்தின் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று இரவு வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இந்தப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

மேலும், தென் தமிழகக் கடலோர மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் 36 டிகிரி செல்சியஸைத் தாண்டியே உள்ளது. கோடை மழையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு சிறு நிம்மதியைத் தந்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மலை மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

