Dailyhunt
"ஆ.ராசாவைக் கேட்க தெம்பு இருக்கிறதா?" - திமுகவின் ஊழல் பட்டியலை வாசித்து எடப்பாடி சவால்!

"ஆ.ராசாவைக் கேட்க தெம்பு இருக்கிறதா?" - திமுகவின் ஊழல் பட்டியலை வாசித்து எடப்பாடி சவால்!

மிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக ஆ.ராசா பேசியதாகக் கூறப்படும் ஆடியோ குறித்து இ.பி.எஸ் விமர்சித்து பேசினார். "ஆ.ராசாவின் பேச்சைக் கேட்டு ஸ்டாலின் அதிர்ந்து போய்விட்டார். சொந்த அப்பாவையே வீட்டுச் சிறையில் வைத்ததாகக் கூறப்படும் கருத்தைத் தட்டிக்கேட்க ஸ்டாலினுக்குத் தெம்பு இருக்கிறதா? ஆ.ராசாவைக் கண்டித்தால் இன்னும் பல ஆடியோக்கள் வெளியாகிவிடும் என்ற பயத்தில் முதலமைச்சர் இருக்கிறார்."

"அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், இந்த ஆடியோ விவகாரம் குறித்துச் சட்ட ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்."

"அ.தி.மு.க. ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் உட்பட 10 ஆண்டுகளில் 17 கல்லூரிகளைக் கொண்டு வந்தோம். ஆனால், இந்த 4 ஆண்டுக்கால தி.மு.க. ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட கொண்டு வரப்படவில்லை." "மின்கட்டணம் 67% வரை உயர்ந்துள்ளது. வீட்டு வரி, கடை வரி என அனைத்தும் உயர்ந்துவிட்டன. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கிறது இந்த விடியா அரசு."

"2ஜி ஊழல் முதல் தற்போதைய டாஸ்மாக் முறைகேடுகள் வரை தி.மு.க. ஊழலுக்கு ஊற்றுக்கண். ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெற்று, ஆண்டுக்கு 5400 கோடி ரூபாய் வீதம் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்."

அ.தி.மு.க. வெற்றி பெற்றால் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டார். அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ஃப்ரிட்ஜ் (Refrigerator) வழங்கப்படும். வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 10,000 உதவித்தொகை வங்கியில் செலுத்தப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பயிர்க்கடன்கள் மீண்டும் தள்ளுபடி செய்யப்படும் மற்றும் 'குடிமராமத்து' திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். மூடப்பட்ட 'அம்மா மினி கிளினிக்'கள் மீண்டும் திறக்கப்படும்.

"மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ள நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உரிய முறையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என்றும் அவர் உறுதி அளித்தார்.

இறுதியாக வானூர், விழுப்புரம், செஞ்சி, விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர்களுக்கு இரட்டை இலை மற்றும் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai