தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், காங்கிரசுக்கு அமைச்சரவையில் 2 இடங்களை வழங்க அக்கட்சி சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதற்குத் தவெக-வுக்குப் பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படுவதால், 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடன் இந்த அதிகாரப் பங்கீடு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு கூட்டணி அரசு அமைவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அமைச்சரவையில் இரண்டு முக்கியத் துறைகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட உள்ளதாகவும், அதோடு சில அரசு வாரியப் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், பாஜக-வுடன் எந்த நிலையிலும் சமரசம் செய்யக்கூடாது என்றும் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளைத் தவெக ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே, அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகக் காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த ஆதரவு முடிவைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்த விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளும் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கவுள்ள விஜய், இந்த ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், பல ஆண்டுகளாக நீடித்து வந்த பாரம்பரிய அரசியல் கூட்டணிகளில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

