Dailyhunt
அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா?... ஈரான் அதிரடி தகவல்!

அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா?... ஈரான் அதிரடி தகவல்!

ரான் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் எப்-35 மற்றும் எப்-15 ரக போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவம் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 19-ம் தேதி ஒரு எப்-35 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது முறையாக அதிநவீன அமெரிக்கப் போர் விமானத்தை அழித்துள்ளதாக ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, விமானத்தின் சிதைந்த பாகங்கள் எனக் கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சம்பவத்தின் போது விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பிய அமெரிக்க விமானி ஒருவரைத் தங்களது ராணுவம் சிறைபிடித்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அமெரிக்கத் தரப்போ தங்களது விமானி ஒருவரைச் சிறப்புப் படைகள் மூலம் பத்திரமாக மீட்டுவிட்டதாகவும், மற்றொருவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளன. பிடிபட்டதாகக் கூறப்படும் விமானி குறித்த அதிகாரப்பூர்வமான புகைப்படங்கள் எதனையும் ஈரான் இதுவரை வெளியிடாதது ஒரு மர்மமாகவே நீடிக்கிறது.

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், தங்களது விமானம் ஈரான் எல்லைக்குள் விழுந்ததை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனினும், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தத் தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்க ராணுவத் தலைமை மாற்றப்பட்டு வரும் நிலையில், ஈரானின் இந்தத் தாக்குதல் செய்தி அமெரிக்க அரசுக்குக் கூடுதல் நெருக்கடியைத் தந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai