Dailyhunt
அன்பில் மாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்... அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

அன்பில் மாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்... அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உபகோவிலான அன்பில் மாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டிற்கான பங்குனி தேரோட்டத் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இக்கோவிலில் கடந்த மாதம் 15-ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் உலக மக்களின் நன்மைக்காக அம்மன் "பச்சை பட்டினி விரதம்" மேற்கொள்வது வழக்கம். இந்த விரதத்தின் நிறைவாகத் தேரோட்டத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் உற்சவர் எழுந்தருளினார்.

லால்குடி, அன்பில், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ஓசக்தி பராசக்தி' என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டுப் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றப் பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் காளி வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.வழிநெடுகிலும் பக்தர்களுக்குத் தண்ணீர் பந்தல்கள் மூலம் நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவையொட்டி லால்குடி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தேரோட்டம் நடைபெற்ற பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai