உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கிய சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கிய சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று அதிகாலையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் இன்று காலை 7:25 மணி வரை பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். இதனைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அவர் ராமராயர் மண்டபம் சென்றடைகிறார், அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள். அதனைத் தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற உள்ளது.
இன்று இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு எழுந்தருளும் அழகர், நாளை மதியம் தேனூர் மண்டபத்தில் மண்டுக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் முக்கிய நிகழ்வை நடத்துகிறார்.

நாளை நள்ளிரவு 12 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய நடைபெறும் தசாவதாரக் காட்சியில் பெருமாளின் பத்து அவதாரங்களையும் தரிசிக்கலாம். மே 4-ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளும் அழகர், மீண்டும் அழகர்மலைக்குத் தனது பயணத்தைத் தொடங்குவார். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால் மதுரை மாநகரம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் தின விடுமுறை என்பதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறப்புப் பேருந்துகள் மற்றும் குடிநீர் வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் விரிவாகச் செய்துள்ளது.