Dailyhunt
பள்ளி வேன் மீது பைக் மோதி கோர விபத்து... 2 இளைஞர்கள் துடிதுடிக்கப் பலி!

பள்ளி வேன் மீது பைக் மோதி கோர விபத்து... 2 இளைஞர்கள் துடிதுடிக்கப் பலி!

ஞ்சாவூர் அருகே பள்ளி வேன் பின்புறம் பைக் மோதிய விபத்தில், மைக்செட் தொழிலாளர்களான இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மற்றொரு இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன் (21), பாண்டி (20) மற்றும் நிரஞ்சன் (23). நண்பர்களான இவர்கள் மூவரும் மைக்செட் அமைக்கும் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். நேற்று ஒரத்தநாடு பகுதியில் ஒரு விசேஷத்திற்காக மைக்செட் அமைக்கும் வேலையை முடித்துவிட்டு, ஒரே பைக்கில் மூவரும் பள்ளி அக்ரஹாரம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.

தஞ்சை - ஒரத்தநாடு நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பள்ளி வேன் திடீரென நின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த இவர்களது பைக், கட்டுப்பாட்டை இழந்து பள்ளி வேனின் பின்புறத்தில் பலமாக மோதியது.

பலத்த காயமடைந்த பிரபாகரன் (21) , விபத்து நடந்த இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். படுகாயமடைந்த பாண்டி (20) மற்றும் நிரஞ்சனை அக்கம் பக்கத்தினர் மீட்டுத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது நிரஞ்சன் (23) தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரபாகரனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த நேரத்தில் பள்ளி வேனில் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai