Dailyhunt
பவானிபூரில் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் - 2 கட்டங்களாக நடைபெறும் மேற்கு வங்க தேர்தல்!

பவானிபூரில் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் - 2 கட்டங்களாக நடைபெறும் மேற்கு வங்க தேர்தல்!

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் நேற்று அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சர்வே கட்டிடத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தனது மனுவை அளித்தார். முன்னதாகத் தனது இல்லத்திலிருந்து தொண்டர்கள் புடைசூழப் பேரணியாக வந்து அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் கொல்கத்தா மேயர் பிரஹாத் ஹக்கிம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்தத் தேர்தலில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி களம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவைத் தோற்கடித்த சுவேந்து அதிகாரி, மீண்டும் அதே போன்ற வெற்றியைப் பெறப் போவதாகச் சவால் விடுத்துள்ளார். அதே சமயம், தனது கோட்டையான பவானிபூரில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் எனத் திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது: முதற்கட்டத் தேர்தல்: ஏப்ரல் 23, 2026, இரண்டாம் கட்டத் தேர்தல்: ஏப்ரல் 29, 2026, வாக்கு எண்ணிக்கை: மே 4, 2026.

வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியதோடு, இதற்கு எதிராகத் தனது போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai