Dailyhunt
பிளிங்கிட் கிடங்கு தீப்பிடித்து எரிந்து சாம்பல்... ரூ.40 லட்சம் மளிகைப் பொருட்கள் நாசம்; மின்கசிவால் விபரீதம்!

பிளிங்கிட் கிடங்கு தீப்பிடித்து எரிந்து சாம்பல்... ரூ.40 லட்சம் மளிகைப் பொருட்கள் நாசம்; மின்கசிவால் விபரீதம்!

சென்னை தியாகராயர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிங்க் இட் கிடங்கில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த இந்தக் கிடங்கில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ மளமளவெனப் பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீயானது கிடங்கு முழுவதும் சூழ்ந்ததால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாகக் காணப்பட்டு பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் அனைத்தும் தீயில் கருகி முற்றிலும் நாசமாகின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தின் போது ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என்றாலும், உடமைகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது நிறுவனத் தரப்பினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு தான் தீ விபத்திற்கு முக்கியக் காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இருந்தபோதிலும், பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதிச் செயல்கள் உள்ளனவா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பரபரப்பான டி.நகர் பகுதியில் நிகழ்ந்த இந்தத் தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai