மத்தியப் பிரதேசத்தில் கடந்த 29-ஆம் தேதி இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், ஒரு சிறிய காரணத்திற்காக மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, மணமகள் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை மேடையிலிருந்து கீழே இறங்குமாறு புகைப்படக் கலைஞர் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் புகைப்படக் கலைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சண்டை விரைவில் இரு வீட்டாருக்கும் இடையிலான மோதலாக மாறியது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த உறவினர்கள், அங்கிருந்த மேஜை மற்றும் நாற்காலிகளைத் தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசித் தாக்கிக்கொண்டனர்.
மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய திருமண விழா, திடீரெனப் போர்க்களமாக மாறியதைக் கண்டு அங்கிருந்த விருந்தினர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்தத் தாக்குதலில் இரு தரப்பையும் சேர்ந்த பலருக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திருமணப் பந்தத்தின் தொடக்கத்திலேயே நடந்த இந்த அடிதடிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.