Dailyhunt
"டிரம்ப்பின் எச்சரிக்கை முட்டாள்தனமானது.. போர் நிறுத்தம் நிராகரிப்பு" - சீறிய ஈரான்

"டிரம்ப்பின் எச்சரிக்கை முட்டாள்தனமானது.. போர் நிறுத்தம் நிராகரிப்பு" - சீறிய ஈரான்

ரபிக் கடலில் உள்ள மிக முக்கியமான கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முட்டிக்கொண்டது.

அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கையை ஈரான் ஏளனம் செய்துள்ளது.

வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பானப் பாதையை வழங்கவும், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்கவும் ஈரானுக்கு அதிபர் டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஜலசந்தியைத் திறக்கத் தவறினால், ஈரானின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது குண்டுவீசித் தகர்க்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை "முட்டாள்தனமானது" என்று கூறி ஈரான் நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் மூலமாகத் தனது பதிலை அனுப்பியுள்ள ஈரான், நிபந்தனையற்றப் போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

எகிப்தில் உள்ள ஈரான் தூதரகத் தலைவர் மொஜ்தபா பெர்டோசிபூர் கூறுகையில், "வெறுமனே ஒரு போர் நிறுத்தத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். எதிர்காலத்தில் எங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்ற சர்வதேச உத்தரவாதங்கள் கிடைத்தால் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றிச் சிந்திப்போம்," எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடங்கியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருவதால், உலகளாவியப் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்க - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதில் இருந்தே இந்தப் போர் தீவிரம் அடைந்துள்ளது. தற்போது டிரம்ப் விதித்தக் காலக்கெடு முடிய உள்ள நிலையில், அமெரிக்கா அடுத்தக்கட்டமாக ஈரான் மீது பெரிய அளவிலானத் தாக்குதலைத் தொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai