Dailyhunt
எஸ்பிபி-க்கு 10 அடி சிலை: ஆஸ்கர் நாயகன் கீரவாணி திறப்பு... திரண்ட இசை நட்சத்திரங்கள்!

எஸ்பிபி-க்கு 10 அடி சிலை: ஆஸ்கர் நாயகன் கீரவாணி திறப்பு... திரண்ட இசை நட்சத்திரங்கள்!

சையுலகின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்து, 40000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்த மறைந்த பாடகர் எஸ்.பி.

பாலசுப்ரமணியத்திற்கு, கேரளா அரசு சார்பில் தற்போது பிரம்மாண்டமான கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகம் மற்றும் ஹைதராபாத்தில் இவருக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரளாவின் பாலக்காடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 10 அடி உயரமுள்ள முழு உருவச் சிலை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இசை ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மலையாளப் பின்னணி பாடகர்கள் சங்கம் மற்றும் ஸ்வரலயா அமைப்பு இணைந்து இந்தச் சிலையை நிறுவியுள்ளன.

இந்தச் சிலையை ஆஸ்கர் விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் கீரவாணி திறந்து வைத்து எஸ்பிபி-யின் சாதனைகளை நினைவு கூர்ந்தார். இந்த விழாவில் தென்னிந்தியாவின் முன்னணி பாடகர்களான ஹரிஹரன், சித்ரா, சுஜாதா மோகன், மனோ, உன்னி மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நேரில் பங்கேற்று தங்களது அஞ்சலியைச் செலுத்தினர். சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற 'சங்கீத மேகம்' என்ற இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து தங்களுக்குப் பிடித்தமான பாடல்களைக் கேட்டு நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்த விழாவில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்பிபி-யின் சிலை அமைந்துள்ள இந்தப் பகுதியை எதிர்காலத்தில் ஒரு பிரம்மாண்டமான 'இசைப் பூங்காவாக' மாற்றவும் கேரளா அரசு திட்டமிட்டு வருகிறது. இசைக்கு மொழி கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில், கேரள மண்ணில் தமிழ்ப் பாடகருக்கு இவ்வளவு பெரிய கௌரவம் வழங்கப்பட்டிருப்பது கலைத்துறையினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai