Dailyhunt
எதிரிகளை அலறவிடும் நீர்மூழ்கி கப்பல் 'அரிதாமன்' கடற்படையில் சேர்ப்பு!

எதிரிகளை அலறவிடும் நீர்மூழ்கி கப்பல் 'அரிதாமன்' கடற்படையில் சேர்ப்பு!

ந்திய கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், ஐ.என்.எஸ். தாராகிரி போர்க்கப்பலுடன் ஐ.என்.எஸ். அரிதாமன் என்ற அதிநவீன நீர்மூழ்கி கப்பலும் நேற்று முறைப்படி கடற்படையில் சேர்க்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் இந்த நீர்மூழ்கி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சுமார் 7,000 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலில், 90 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணுசக்தி மூலம் இயங்கும் இந்த நீர்மூழ்கி கப்பல், தண்ணீருக்கு அடியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது. ஏற்கனவே கடற்படையில் உள்ள அரிஹன்ட் மற்றும் அரிகாட் ஆகிய நீர்மூழ்கி கப்பல்களை விட, இது 2 மடங்கு கூடுதல் சக்தி வாய்ந்தது என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஏவுகணைகளை ஏவுவதற்கு ஏதுவாக 8 ஏவு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன, இது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

இந்தக் கப்பலில் உள்ள அணு ஏவுகணைகள் கடலுக்கு அடியில் இருந்தபடியே வான் மற்றும் தரையில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை படைத்தவை. குறிப்பாக 24 'சகாரிகா கே-15' ரக ஏவுகணைகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன, இவை 750 முதல் 1,500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளை நொடிப் பொழுதில் அழிக்கும். எதிரி நாடுகளின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் இந்த 'அரிதாமன்' பெரும் துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai