Dailyhunt
இந்தியாவுக்கு கூடுதல் எரிசக்தி தரத் தயார்... ரஷ்யா அதிரடி சலுகை!

இந்தியாவுக்கு கூடுதல் எரிசக்தி தரத் தயார்... ரஷ்யா அதிரடி சலுகை!

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு கூடுதல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது, ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்த அவர், இரு நாடுகளுக்கு இடையிலான எரிசக்தி உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் போக்குவரத்து தடையால் இந்தியாவுக்கு வழக்கமாக கிடைக்கும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்யும் வகையில், ரஷ்ய நிறுவனங்கள் இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) தங்கு தடையின்றி வழங்கத் தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் எண்ணெயின் அளவு 90 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிசக்தி மட்டுமல்லாது, விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் மற்றும் அணுசக்தி துறையிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. குறிப்பாக, கடந்த 2025-ம் ஆண்டின் இறுதியில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் உரங்களின் அளவு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கவும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ரஷ்யாவின் இந்த சலுகை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai