Dailyhunt
'கல்லாபெட்டி கூட்டணி கலகலத்துவிட்டது' - நெல்லையில் திமுக-வை கலாய்த்த விஜய்... மக்கள் உற்சாக வரவேற்பு!

'கல்லாபெட்டி கூட்டணி கலகலத்துவிட்டது' - நெல்லையில் திமுக-வை கலாய்த்த விஜய்... மக்கள் உற்சாக வரவேற்பு!

மிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் த.வெ.க வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த விஜய், திமுக அரசை பங்கமாக கலாய்த்தார்.

திமுக அரசை விமர்சித்து பேசும் இடங்களில் தொண்டர்கள் மட்டுமின்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொதுமக்களும் ஆரவாரம் செய்கின்றனர். "கல்லாபெட்டி கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது" என்று அவர் கூறியது தொண்டர்களிடையே பலத்த கரகோஷம் எழுந்தது. பிரசார மேடையில் பேசிய விஜய், திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

"திமுக ஆட்சி முழுக்க ஊழலில் ஊறிப்போய் நாறிப்போய் கிடக்கிறது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்கிறீர்கள்? மக்களின் பணத்திலிருந்து ஒரு பைசாவைக் கூட நான் எடுக்க மாட்டேன் என்று தில்லாகச் சொல்வேன். உங்களால் அப்படிச் சொல்ல முடியுமா?" எனச் சவால் விடுத்தார்.

"திமுக கூட்டணி என்பது ஒரு 'கல்லாபெட்டி கூட்டணி'. அது இப்போது கலகலத்துப் போயுள்ளது. கோடிகளைக் கொடுத்து காங்கிரஸ் கட்சியைத் தனது பாக்கெட்டுக்குள் திமுக போட்டுக்கொண்டுள்ளது. ஆனால், உண்மையான காங்கிரஸ் தொண்டர்களும், சிறுபான்மை மக்களும் எங்கள் பக்கம் நிற்கிறார்கள்."

பாஜக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே தமக்கு எதிராகச் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். "திமுக மற்றும் பாஜக கூட்டணிகள் வெளியேதான் தனித்தனி, உள்ளே ஒன்றுதான். விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்துவிடக் கூடாது என்பதில் இரண்டு பேருக்கும் ஒரே குறிக்கோள்தான். விஜய் வந்த பிறகு அவர்களால் ஊழல் செய்ய முடியவில்லை."

நாங்குநேரி சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "நாங்குநேரி பிரச்சினை போதையால் நடந்ததாகச் சொல்கிறார்கள். அதை ஏன் இந்த அரசு தடுக்கவில்லை? மணலையும் மலையையும் திருடுகிறார்கள். பெண்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பே இல்லை" என்று ஆவேசப்பட்டார்.

"தமிழகத்தில் இப்போது நிலவுவது இருமுனைப் போட்டிதான். ஒன்று டிவிிகே, இன்னொன்று திமுக. மற்றவர்கள் யாரும் போட்டியில் இல்லை. இது மாற்றத்திற்கான தேர்தல். மற்றவர்களுக்கு இது எலெக்ஷன், எனக்கு இது எமோஷன். வரும் 23-ம் தேதி 'விசில்' சின்னத்திற்கு ஓட்டுப் போட்டு மாற்றத்தை உருவாக்குங்கள். இது விசில் புரட்சித் தேர்தலாக இருக்க வேண்டும்."

தனது படமான 'ஜனநாயகன்' முடக்கப்பட்டதையும், தனக்குப் பிரசாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய விஜய், "என்னை மக்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது" என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி முடித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai