Dailyhunt
கருக்கலைப்பு கும்பல் சிக்கியது - நர்சிங் படித்த பெண் உட்பட இருவர் கைது!

கருக்கலைப்பு கும்பல் சிக்கியது - நர்சிங் படித்த பெண் உட்பட இருவர் கைது!

ர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் நீண்ட நாட்களாகச் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்று வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மருத்துவக் குழுவினர் நடத்திய சோதனையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ரங்காபுரம் பகுதியில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சட்டவிரோத கருக்கலைப்பு நடப்பதாக மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரனுக்குத் தகவல் கிடைத்தது.இதன்பேரில், மருத்துவ அலுவலர் ராமதாஸ் தலைமையிலான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக் குழுவினர், ரங்காபுரத்தில் உள்ள செந்தில் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையின் போது, பாலினத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத கருக்கலைப்பிற்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் அதிக அளவில் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில், செந்திலின் மகள் பரிமளா (34) என்பவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு, இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவருக்கு உதவியாக ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி (47) என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.மாவட்ட சுகாதார அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், பென்னாகரம் போலீசார் பரிமளா மற்றும் சாந்தி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவ அலுவலர்கள் அளித்த தகவலின்படி, இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பாலக்கோடு பகுதியில் இதேபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டபோது அதிகாரிகளிடம் சிக்காமல் தலைமறைவாகி, பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். தற்போது மீண்டும் அதே குற்றத்தைச் செய்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் பெண் சிசுக்கொலைக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள சூழலில், இத்தகைய கும்பல் பிடிபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai