Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காட்டு யானை அட்டகாசம்... முருகன் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை!

காட்டு யானை அட்டகாசம்... முருகன் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை!

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகருக்குள் இன்று அதிகாலை ஊடுருவிய காட்டு யானை ஒன்று எல்க்ஹில் பகுதியில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய இந்த யானை, குடியிருப்புப் பகுதிகள் வழியாகச் சென்று எல்க்ஹில் முருகன் கோவில் அமைந்துள்ள மலைப் பாதையில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்க்ஹில் முருகன் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை மற்றும் காவல்துறை சார்பில் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரும் வனத்துறையினர், அதனை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில் சுற்றுப்புறப் பகுதிகளில் யானை சுற்றி வருவதால், அங்குப் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பூசாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பகுதிக்கு வர வேண்டாம் என்றும், தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி நகரின் முக்கியப் பகுதியான எல்க்ஹில் பகுதியில் யானை புகுந்த செய்தி காட்டுத்தீ போலப் பரவியதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் மேளம் அடித்தும் யானையை வனத்திற்குள் விரட்ட முயற்சி செய்து வருவதால், விரைவில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யானை முழுமையாக வனப்பகுதிக்குள் சென்ற பிறகே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai