Dailyhunt
மாம்பழம் சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பழம் சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சிப் பூசல் உச்ச நீதிமன்றப் படி ஏறியுள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே சின்னம் தொடர்பாக நிலவும் மோதலில், நீதிமன்றம் இன்று தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

பாமகவின் அதிகாரப்பூர்வத் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வரும் நிலையில், அவருக்குத் தேர்தல் ஆணையம் 'மாம்பழம்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. "கட்சி தொடர்பான சட்ட ரீதியான பிரச்சனைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அவசரமாகச் சின்னத்தை அன்புமணி தரப்புக்கு ஒதுக்கக் கூடாது. சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்," என உச்ச நீதிமன்றத்தில் டாக்டர் ராமதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

"கட்சி எங்களிடம் இருக்கும்போது, சின்னத்தை முடக்கக் கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் சட்டப்படி ஏற்க முடியாதது," என அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் ஒரு முக்கிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது:

"இந்த விவகாரத்தில் நேரடியாக உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. இது குறித்துத் தெளிவான விளக்கங்களைப் பெற டாக்டர் ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்," என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேர்தல் ஆணையத்திற்கு விலக்கு: சின்னம் ஒதுக்கீடு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவில் தற்போதைக்குத் தலையிடப் போவதில்லை என்பதையும் நீதிமன்றம் சூசகமாகத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தற்போதைக்கு 'மாம்பழம்' சின்னம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவிடமே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு அவசர மனுத் தாக்கல் செய்து இடைக்காலத் தடை வாங்கினால் மட்டுமே சின்னம் முடக்கப்படும் அபாயம் உள்ளது. வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், இந்த சட்டப் போராட்டம் பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai