Dailyhunt
மே 31 வரை இஸ்ரேல் விமானங்கள் வரை ரத்து...கதியின்றி தவிக்கும் 40,000 இந்தியர்கள்!

மே 31 வரை இஸ்ரேல் விமானங்கள் வரை ரத்து...கதியின்றி தவிக்கும் 40,000 இந்தியர்கள்!

மேற்காசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே மூண்டுள்ள போர், தற்போது சர்வதேசப் போக்குவரத்துத் துறையைப் பந்தாடி வருகிறது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடர் மோதல் மற்றும் வான்வெளியில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் வரும் மே 31-ம் தேதி வரை அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. போர் தீவிரமடைந்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தச் சவாலான முடிவை எடுத்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தத் திடீர் விமான ரத்தத்தால் இஸ்ரேலில் வசித்து வரும் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வேலை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா வரத் திட்டமிட்டிருந்தவர்கள், தற்போது போர் முனையில் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. லூப்தான்சா, எமிரேட்ஸ் போன்ற சர்வதேச விமான நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது சேவையை முடக்கிவிட்ட நிலையில், எல் அல் (El Al) போன்ற இஸ்ரேலிய நிறுவனங்கள் மட்டுமே உயிர் பணயம் வைத்து மிகக் குறைந்த அளவில் விமானங்களை இயக்கி வருகின்றன. இதனால் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள், வேறு வழியின்றி அண்டை நாடுகளான ஜோர்டான் அல்லது எகிப்திற்குச் சாலை வழியாகச் சென்று, அங்கிருந்து விமானம் பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

டெல் அவிவ் நகரில் உள்ள இந்தியத் தூதரகம், அங்குள்ள இந்திய மாணவர்களுடனும் தொழிலாளர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் அவசர உதவிகளைத் தூதரகம் வழங்கி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் வளைகுடா பகுதிகளில் பதற்றம் தணியாத வரை இந்த விமான ரத்து நீடிக்கக்கூடும் எனத் தெரிகிறது. சொந்த ஊர் திரும்பக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு இது பெரும் இடியாக இறங்கியுள்ளது. மத்திய அரசு தலையிட்டுப் போர் பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களைச் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai