கான்பூர்: உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சுட்டெரிக்கும் வெயிலில் மயங்கிக் கிடந்த தனது தாயின் உயிரைக் காப்பாற்ற 8 வயதுச் சிறுவன் ஒருவன் தனியாளாகப் போராடிய காணொளி, காண்போர் கண்களைக் குளமாக்கியுள்ளது.
அதே வேளையில், உதவி செய்ய முன்வராமல் வேடிக்கை பார்த்த பொதுமக்களின் மனிதாபிமானமற்ற போக்கையும் இச்சம்பவம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
கான்பூர் வீதியில் நிலவிய கடும் வெப்பம் மற்றும் புழுக்கத்திற்கு இடையே, சுமார் 8 அல்லது 9 வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுவன், சாலையோரம் மயங்கிக் கிடந்த தனது தாயை எழுப்பத் தீவிரமாக முயன்று கொண்டிருந்தான். வறுமையின் கோரப் பிடியில் சிக்கிய அந்தச் சிறுவன், கொதிக்கும் தார்ச்சாலையில் வெறுங்காலுடன் அங்குமிங்கும் ஓடி, கையில் இருந்த நீர் குடுவையிலிருந்து தண்ணீரை எடுத்துத் தாயின் முகத்தில் தெளித்துக் கொண்டிருந்தான்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்தத் தாய் மெல்லக் கண் விழித்தபோது, அந்தச் சிறுவனின் முகத்தில் தெரிந்த நிம்மதி அவனது அளவற்ற அன்பைப் பறைசாற்றியது. இந்த உருக்கமான நிகழ்வின் போது, அங்கிருந்த பாதசாரிகளோ அல்லது ஊர்திகளில் சென்றவர்களோ யாரும் அந்தச் சிறுவனுக்கு உதவ முன்வரவில்லை. மாறாக, பலரும் தங்களது கைபேசிகளில் இந்தத் துயரத்தைக் காணொளி எடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.
இணையதளங்களில் வைரலாகி வரும் இந்தக் காணொளியைப் பார்த்த பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். "அந்தக் குழந்தைக்குத் தேவைப்பட்டது உதவி, படக்கருவி அல்ல" எனப் பலரும் விமர்சித்துள்ளனர். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய உலகில், மனிதநேயம் மங்கி வருவதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனின் தவிப்பிற்கு முன்னால் ஒட்டுமொத்தச் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

