Dailyhunt
ராஜினாமா செய்ய மம்தா மறுப்பு... மேற்கு வங்க அரசியலில் திடீர் முட்டுக்கட்டை!

ராஜினாமா செய்ய மம்தா மறுப்பு... மேற்கு வங்க அரசியலில் திடீர் முட்டுக்கட்டை!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மை பெற்றுள்ள சூழலில், மம்தாவின் இந்த முடிவு அம்மாநில அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தங்களது வெற்றி சதித் திட்டத்தால் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மக்களின் தீர்ப்பால் தாங்கள் தோற்கடிக்கப்படவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் துணையோடு பாஜக வாக்குக் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் மம்தா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஏறக்குறைய 100 தொகுதிகளில் தங்களது வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தமக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால் முறைப்படி புதிய அரசு அமைப்பதில் சிக்கல் நீடிப்பதோடு, கொல்கத்தாவில் அரசியல் பதற்றமும் அதிகரித்துக் காணப்படுகிறது.

மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்தாலும், அவர் சட்டப்படி முதலமைச்சராகத் தொடர முடியாது எனச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டமன்றத்தில் பெரும்பான்மை இழந்த ஒரு முதலமைச்சர், அடுத்த நிமிடம் பதவியில் நீடிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆளுநர் புதிய முதலமைச்சரைப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்போது, மம்தாவின் பதவி தானாகவே காலாவதியாகிவிடும் என்பதால், மேற்கு வங்கத்தில் அடுத்த சில மணி நேரங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai