Dailyhunt
சமைத்து தரல... மனைவியை தீயிட்டு எரித்துக் கொன்ற கணவன்... கொடூரம்!

சமைத்து தரல... மனைவியை தீயிட்டு எரித்துக் கொன்ற கணவன்... கொடூரம்!

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் சுக்னா பாய்க்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணமான ஒரே மாதத்திலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையான சங்கர், தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்ததால் சுக்னா பாய் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அங்கேயும் விடாமல் சென்ற சங்கர், தனக்கு உடனடியாக உணவு சமைத்துத் தர வேண்டும் எனக் கூறி சுக்னா பாயை மிரட்டித் தனது வீட்டிற்கு மீண்டும் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார்.

வீட்டிற்கு வந்ததும் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த சங்கர், சுக்னா பாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைச் சரமாரியாகத் தாக்கியதோடு மனிதாபிமானமின்றித் தீயிட்டு எரித்துக் கொன்றார். இந்த வழக்கில் பூந்தி நீதிமன்றம் மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், மருத்துவர்கள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட மனைவியின் மரண வாக்குமூலம் உண்மையானது எனக் கூறி சங்கரின் வாதங்களை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நம் நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்தாலும் ஆணாதிக்கம் என்பது இன்னும் ஒரு தீராத சமூக நோயாகவே நீடிக்கிறது என்று வேதனை தெரிவித்தனர். சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் பெண்களுக்குச் சம உரிமை என்பது எட்டாக்கனியாக இருப்பதாகவும், 2023-ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.48 லட்சம் குற்றங்கள் பதிவாகி உள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இறுதியில், மனைவியைக் கொடூரமாகக் கொன்ற கணவனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்து அதிரடித் தீர்ப்பளித்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai