Dailyhunt
சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு எதிரொலி... லத்தியை எடுக்க இன்ஸ்பெக்டர் அனுமதி கட்டாயம்!

சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு எதிரொலி... லத்தியை எடுக்க இன்ஸ்பெக்டர் அனுமதி கட்டாயம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில், மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு, தமிழக போலீஸார் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக, மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்குக் காவல்துறை உயர்மட்ட அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசாருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை, இந்தியக் காவல் துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, லாக்-அப் விசாரணைகள் மற்றும் குற்றவாளிகளைக் கையாள்வதில் உள்ள நடைமுறைகளை மாற்றியமைக்கத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

காவல் நிலையங்களில் இனி அத்துமீறல்கள் நடக்கக் கூடாது என்பதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். அதன் ஒரு பகுதியாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள்: இனிமேல் ஆய்வாளரின் முறையான உத்தரவு இல்லாமல், எந்தவொரு காவலரும் லத்தியைக் கையில் எடுக்கக் கூடாது. ஆய்வாளர் அல்லது டிஎஸ்பி ஆகியோரின் நேரடி கண்காணிப்பு இன்றி, காவல் நிலையங்களில் எந்தவொரு விசாரணைக்கும் அனுமதி இல்லை.விசாரணையின் போது கைதிகளைத் தாக்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இரும்பு கம்பிகள், பிளாஸ்டிக் குழாய்கள் போன்றவை காவல் நிலையங்களில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

"அடித்துத்தான் உண்மையை வரவழைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தப் பணிக்கே தகுதியற்றவர்கள்" என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இனிவரும் காலங்களில் குற்றங்களை நிரூபிக்க அறிவியல் ரீதியான புலனாய்வு முறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒருவரை அடிப்பதற்கோ அல்லது உடல்ரீதியாகத் துன்புறுத்துவதற்கோ போலீசாருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதைத் தலைமைக் காவலர் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை இந்தத் தீர்ப்பு நினைவூட்டியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai