Dailyhunt
சாதி மறுப்பு திருமணம்... கணவர் தற்கொலை செய்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு!

சாதி மறுப்பு திருமணம்... கணவர் தற்கொலை செய்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அனுமுலா ராகேஷ் ரெட்டி (25) மற்றும் தாரிகோப்புலா ஹரிகா (22) ஆகிய இருவரது மரணமும், சமூகத்தில் இன்னும் வேரூன்றி இருக்கும் சாதியக் கட்டுப்பாடுகளின் கொடூர முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

ராகேஷ் ரெட்டியும், ஹரிகாவும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அனைத்துத் தடைகளையும் தாண்டி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஹரிகா மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராகேஷ் ரெட்டியின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்தை ஏற்க மறுத்து விட்டனர். ராகேஷை அவரது குடும்பத்தினர் கடுமையாகச் சாடியதுடன், அவருடனான உறவைத் துண்டித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

குடும்பத்தினரின் புறக்கணிப்பால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராகேஷ், கடந்த மார்ச் 28-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மார்ச் 30-ம் தேதி உயிரிழந்தார்.

தன் உயிருக்கு உயிரான கணவரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஹரிகா நிலைகுலைந்து போனார். "ராகேஷ் இல்லாத உலகில் என்னால் வாழ முடியாது" எனத் தனது நெருங்கியவர்களிடம் கூறிப் புலம்பியுள்ளார். ராகேஷ் மறைந்து சில நாட்களிலேயே, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஹரிகாவும் தற்கொலை செய்துகொண்டார். திருமணமான சில காலத்திலேயே இரு இளம் உயிர்கள் சாதிப் பிடிமானத்தால் பலியாகியுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராகேஷ் ரெட்டியின் குடும்பத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காதல் ஜோடியின் இந்த அடுத்தடுத்த மரணம் சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai