Dailyhunt
சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்!

சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு: தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாகச் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்க ஆதரவு தெரிவித்து, வெற்றி பெற்ற அனைத்து தவெக எம்.எல்.ஏ-க்களிடமும் கையெழுத்து பெறப்பட்டது.

ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 12 இடங்கள் குறைவாக இருந்தாலும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க உரிமை கோர விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காகத் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை நாளை நேரில் சந்தித்து, தனது கட்சிக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்குமாறு அவர் கடிதம் அளிக்க உள்ளார். இதற்கான சந்திப்பு நேரம் கோரி ஆளுநர் மாளிகைக்கு ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

ஆளுநர் அழைப்பு விடுக்கும் பட்சத்தில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பார். அதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் ஆதரவு கோரிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், விஜய் பெரும்பான்மையை நிரூபித்துத் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த அரசியல் நகர்வு தமிழகத்தில் ஒரு புதிய வரலாற்றுத் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai