தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முக்கியத் துறை சார்ந்த விவாதங்களின் போது அதிமுகவைச் சேர்ந்த மூத்த சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் அவைக்கோப்பிலேயே தூங்கி வழியும் காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
மக்கள் நலன் சார்ந்த மற்றும் தொகுதி கோரிக்கைகள் குறித்த முக்கிய விவாதங்கள் பேரவையில் நடந்துகொண்டிருந்த வேளையில், நத்தம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் தனது இருக்கையிலேயே அமர்ந்தபடி கண் அயர்ந்து தூங்கி வழிந்துள்ளார்.
சட்டமன்ற நேரலை மற்றும் ஒளிபரப்புக் காட்சிகளில் பதிவான இந்தத் துணுக்கு வீடியோ, இணையவாசிகளால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சினைகளைப் பேரவையில் குரல் கொடுத்துப் பேச வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், அவைக் கூட்டத்தொடரின் போது இப்படிப் பொறுப்பற்ற முறையில் தூங்குவது வேதனையளிப்பதாகப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துகளைப் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.

