Dailyhunt
சிபிஐ பிடியில் அனில் அம்பானி... ரூ.73,000 கோடி மோசடிப் புகார் !

சிபிஐ பிடியில் அனில் அம்பானி... ரூ.73,000 கோடி மோசடிப் புகார் !

தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிராக சுமார் 7க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் சிபிஐ மூலம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக ஒரு வங்கியில் மட்டும் ரூ.2,983 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பல்வேறு மோசடி வழக்குகளையும் சேர்த்து மொத்தம் ரூ.73,006 கோடி மதிப்பிலான குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட ஊழல் புகாரில் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சிபிஐ தனது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. வங்கிப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிபிஐ அளித்துள்ள இந்த விரிவான அறிக்கையானது, ரிலையன்ஸ் குழுமத்தின் மீதான பிடியை மேலும் இறுக்கியுள்ளதோடு, நாட்டின் மிகப்பெரிய நிதி மோசடி வழக்குகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

மத்திய புலனாய்வு அமைப்பின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனில் அம்பானி தரப்புக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கு, இந்த விசாரணை அறிக்கை பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதால், வரும் நாட்களில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai