Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி... பஸ் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 3 கல்லூரி மாணவர்கள் பலி!

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி... பஸ் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 3 கல்லூரி மாணவர்கள் பலி!

டலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், மூன்று கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறை நாளில் நண்பர்களுடன் காரில் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் ஆவட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் வேளாண்மை கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் 6 பேர், ஒரு காரில் தொழுதூர் மார்க்கத்திலிருந்து சென்னை நோக்கிப் பயணம் செய்துள்ளனர். திட்டக்குடி அடுத்த எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாகச் சென்ற அந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டை மீது ஏறிப் பாய்ந்து, எதிர் திசையில் வேப்பூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்த தரணி செல்வம், விநாயகமூர்த்தி, நிஷாந்த் ஆகிய மூன்று மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். காரில் இருந்த மற்ற 3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த திட்டக்குடி மற்றும் ராமநத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விபத்து காரணமாகச் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்குக் காரணம் அதிவேகமா அல்லது காரின் டயர் வெடித்ததா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கார் ஓட்டும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் போக்குவரத்துப் போலீசார் அறிவுறுத்துகின்றனர். நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடக் கூடுதலாகச் செல்வது, கட்டுப்பாட்டை இழக்க நேரிடும்போது பெரும் விபத்துகளுக்குக் காரணமாகிறது. காரில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப்பட்டை அணிந்திருந்தால், இத்தகைய மோதல்களின் போது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நண்பர்களுடன் பேசிக்கொண்டோ அல்லது செல்போன் பயன்படுத்திக்கொண்டோ வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரே கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்குக் கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai