Dailyhunt
தெஹ்ரான் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து... தீயில் கருகி 11 பேர் பலி; பலர் படுகாயம்!

தெஹ்ரான் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து... தீயில் கருகி 11 பேர் பலி; பலர் படுகாயம்!

ரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்திற்கு உட்பட்ட அந்திஷே நகரில் அமைந்துள்ள 'அர்காவன்' என்ற பிரம்மாண்டமான பல அடுக்குமாடி வணிக வளாகத்தில் இன்று காலை நேரிட்ட கோர தீ விபத்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் அலுவலகங்கள் இயங்கி வரும் இந்த வளாகத்தில், பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்த நேரத்தில் திடீரென ஒரு பகுதியில் தீப்பிடித்து மளமளவென பரவியது. அடுத்த சில நிமிடங்களில் கட்டிடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், அங்கு வந்திருந்த வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் உயிர் பிழைக்க அலறியடித்தபடி வெளியே ஓடினர்.

இந்தத் துயரச் சம்பவத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கியும், அடர் புகையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவும் 11 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தாலும், அதற்குள் கட்டிடத்தின் பெரும் பகுதி சேதமடைந்தது. விபத்தில் படுகாயமடைந்த 41 பேர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 3 வாரங்களாகப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இந்த விபத்திற்கும் போர் பதற்றத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என ஈரான் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது வணிக வளாகத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தெஹ்ரான் மாகாண மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அந்நாட்டு அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai