தமிழக முதல்வரும், தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடரான பண்டிட் ரிக்கி ராதன் வெற்றிவேல், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.
சந்திரசேகர் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி மூத்த தலைவருமான கல்பகுண்ட்லா கவிதாவை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
தெலங்கானாவில் தனது தந்தை கே.சி.ஆர் மற்றும் சகோதரர் கே.டி.ராமாராவ் ஆகியோரின் அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிச் செயல்பட்டு வரும் கவிதா, மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். வரும் தெலங்கானா சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் சூழலில், விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரை அவர் சந்தித்திருப்பது தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் ஜாதகக் கணிப்புகளில் முக்கியப் பங்காற்றி வரும் ஜோதிடர், கவிதாவைச் சந்தித்ததன் பின்னணியில் அரசியல் முக்கியத்துவம் ஏதேனும் உள்ளதா அல்லது ஆன்மீக ரீதியான சந்திப்பா என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

