Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திமுக கூட்டணியில் பிளவு? காங்கிரஸின் புதிய நகர்வால் தமிழக அரசியலில் பரபரப்பு!

திமுக கூட்டணியில் பிளவு? காங்கிரஸின் புதிய நகர்வால் தமிழக அரசியலில் பரபரப்பு!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் நீண்ட காலமாக நீடித்து வந்த ஒற்றுமையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

22 ஆண்டுகாலத் தங்களது அரசியல் உறவை முறித்துக்கொண்டு, காங்கிரஸ் கட்சி தற்போது புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கத் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், ஆட்சியமைக்கத் தேவையான பலத்தை நோக்கி நகரும் விஜய்யுடன் கைகோர்க்கத் தயாராகி வருவது ஆளும் தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கூட்டணியில் இருந்து கொண்டே ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் காங்கிரஸ் மீது திமுக தரப்பில் 'முதுகில் குத்துபவர்கள்' என்ற கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. திமுக சார்பில் அழைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தைக் காங்கிரஸ் பிரதிநிதிகள் புறக்கணித்தது இந்தப் பிளவை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்துள்ள திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் பெற்ற 5 இடங்களும் திமுக-வின் ஆதரவால் மட்டுமே கிடைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசியல் களத்தில் நிலவும் இந்த இழுபறி நிலையால் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் போன்றவர்கள் காங்கிரசுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை தனது இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளும் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால் தமிழக அரசியல் களம் பெரும் மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai