Dailyhunt
திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறாரா விஜய்?

திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறாரா விஜய்?

மிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர் 14 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்தச் சூழலில், விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் தற்போது சென்னையில் வசித்து வருவதாலும், கட்சித் தலைமை அலுவலகம் மற்றும் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் சென்னையையே மையமாகக் கொண்டுள்ளதாலும், அவர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் ராஜினாமா செய்யும் பட்சத்தில், அங்கு ஆறு மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். திருச்சியில் விஜய்க்குப் பெரிய அளவில் ஆதரவு கிடைத்த போதிலும், நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், விஜய் அந்தத் தொகுதியையே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர். 'திருச்சி தமிழகத்தின் மையம்' என்பதால் அங்கிருந்தே தனது அரசியல் பயணத்தைத் தொடர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எஞ்சிய சில நாட்களில் தனது இறுதி முடிவை விஜய் ஆளுநருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். விஜய்யின் இந்த முடிவு திருச்சி மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai