Dailyhunt
வெப்பம் தணிந்தது... சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

வெப்பம் தணிந்தது... சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

மிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே வர அஞ்சும் அளவிற்குச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில், வான்வெளி மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னையில் இன்று திடீர் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் 12:30 மணியளவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை தொடங்கியது: எழும்பூர், கீழ்ப்பாக்கம், சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், புதுப்பேட்டை, ஆயிரம் விளக்கு மற்றும் ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

திடீர் மழையால் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மேம்பாலங்களின் கீழ் தஞ்சம் புகுந்துள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது:

தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

கோடை காலத்தின் ஆரம்பத்திலேயே 100 டிகிரியைத் தொட்ட வெயிலால் அவதிப்பட்டு வந்த சென்னைவாசிகளுக்கு, இந்த திடீர் மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai