தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரத் தயாராகி வருகிறது.
234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெக-விற்கு 10 இடங்கள் குறைவாக உள்ளன. இந்தச் சூழலில், 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில், ராகுல் காந்தி தரப்பிலிருந்து புதிய நிபந்தனை ஒன்று விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தவெக-விற்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைமை, ஒரு முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது. அதாவது, "எக்காரணம் கொண்டும் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை விஜய் பெறக்கூடாது" என்பதே அந்த நிபந்தனையாகும். தமிழகத்தில் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் காங்கிரஸ், பாஜகவின் நிழல் கூடப் புதிய அரசின் மீது விழக்கூடாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்த அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூடுகிறது. இதில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்று இறுதி முடிவை எடுக்க உள்ளனர். விஜய்யின் கோரிக்கையை ஏற்றுக் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், அது தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கு வித்திடும். அதே நேரத்தில், பாஜக-வை முழுமையாகத் தள்ளிவைக்க வேண்டும், அதிகாரத்தில் பங்களிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் நிபந்தனையை விஜய் ஏற்றுக் கொள்வார் என்றே தெரிகிறது. கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று கூறி கட்சி ஆரம்பித்திருப்பதால், தமிழகத்தில் இருக்கும் பாஜகவின் 1 சீட்டு ஆதரவை விஜய் கோரமாட்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

