Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
10 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி! சீனாவிடம் போர் விமானங்கள் வாங்கும் வங்கதேசம்

10 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி! சீனாவிடம் போர் விமானங்கள் வாங்கும் வங்கதேசம்

தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பாதுகாப்பு மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், சீனாவின் முன்னணி தயாரிப்பான ஜே-10சிஇ (J-10CE) ரக மல்டிரோல் போர் விமானங்களை வாங்குவதற்கு வங்கதேச அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

மொத்தம் 20 முதல் 24 போர் விமானங்களை வாங்குவதற்காக சுமார் 22,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் வரைவு நகலை வங்கதேசம் தற்போது இறுதி செய்துள்ளது.

இந்த இமாலய தொகையை ஒரே தவணையாகச் செலுத்தாமல், தங்களின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தவணை முறையில் சீனாவிற்குச் செலுத்தி முடிக்கவும் வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தனது விமானப்படையின் பலத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல வங்கதேசம் இலக்கு நிர்ணயித்துள்ளது.இருப்பினும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக வங்கதேச பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரான சாஹித் உர் ரஹ்மான் வெளியிட்டுள்ள ஒரு கருத்து தற்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு நடந்த எல்லை மோதலின் போது, இந்திய விமானப்படையின் பலம் வாய்ந்த ரஃபேல் போர் விமானங்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் இதே சீன தயாரிப்பு ஜே-10 போர் விமானங்களைப் பயன்படுத்தியதாகவும், அப்போது அவை இந்திய விமானங்களுக்கு இணையாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஃபேல் போன்ற உலகத்தரம் வாய்ந்த போர் விமானங்களை எதிர்கொள்ளும் திறன் இந்த சீன விமானங்களுக்கு இருப்பதால் தான், தாங்கள் இதைக் கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிப்பதாக சாஹித் உர் ரஹ்மான் பேசியிருப்பது ராணுவ வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.வங்கதேசத்தின் இந்த திடீர் ராணுவ நடவடிக்கை மற்றும் இந்தியாவின் ரஃபேல் விமானத்தை ஒப்பிட்டுப் பேசியுள்ள விதம், தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் அண்டை நாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்பு உத்திகளில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சீனாவின் பாதுகாப்புத் தளவாடங்களை வங்கதேசம் பெருமளவில் நம்பியிருப்பது, இந்திய எல்லையோரப் பாதுகாப்பு விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu