Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பிறந்த சில மணி நேரத்திலேயே ராஜா மாதிரி போஸ்! வைரலாகும் பச்சிளம் குழந்தை

பிறந்த சில மணி நேரத்திலேயே ராஜா மாதிரி போஸ்! வைரலாகும் பச்சிளம் குழந்தை

எகிப்து : நாட்டின் கெய்ரோ நகரில் பிறந்த சில மணி நேரங்களிலேயே பச்சிளம் குழந்தை ஒன்று சாவகாசமாகக் கால் மேல் கால் போட்டு, கையை முகத்தில் வைத்தபடி படுத்துக் கொண்டிருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, உலகளவில் நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்து வைரலாகி வருகின்றன.

பொதுவாகப் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் புதிய சுற்றுப்புறச் சூழலுக்குப் பழகச் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு அழுவது வழக்கம். ஆனால், எகிப்தில் பிறந்த இந்த ஆண் குழந்தை சுற்றியுள்ள எதைப் பற்றியும் கவலைப்படாமல், மிகவும் அமைதியாகவும் சௌகரியமாகவும் படுத்துறங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கெய்ரோவைச் சேர்ந்த குழந்தைகள் நல மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவரான டாக்டர் இஸ்லாம் எல்டே (Dr. Islam Eldeh), பிரசவத்திற்குப் பிந்தைய மருத்துவப் பரிசோதனைகளை முடித்த பிறகு இந்தக் குழந்தையின் வித்தியாசமான படுக்கை நிலையைக் கண்டு வியந்துள்ளார். உடனே அதனைத் தனது மொபைல் போனில் காணொளியாகப் பதிவு செய்து, "ஒரு ராஜா போலப் படுத்திருக்கும் குழந்தை" (Baby lying as a king) என்ற தலைப்புடன் தனது முகநூல் (Facebook) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் குழந்தை ஒரு காலை மற்றொரு காலின் மேல் போட்டுக்கொண்டு, ஒரு கையைத் தனது கன்னத்தில் வைத்தபடி எந்தவொரு சலசலப்பும் இன்றி நிம்மதியாகப் படுத்திருந்தது. இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மருத்துவர் இஸ்லாம் எல்டே, தூங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பச்சிளம் குழந்தையின் முகத்தைத் தனது விரலால் மெதுவாகத் தொட்டு எழுப்ப முயலும் காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தன.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் உள்ள இணையவாசிகள் பலரும் தங்களது ரசனைக்கேற்பப் பல்வேறு நகைச்சுவையான கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu