வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கடுமையாக உயர்வதற்கு ஈரான்தான் முழு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணையை மூடியதும்தான் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை பாதித்து விலையை உயர்த்தியதாக அவர் தெரிவித்தார்.
ட்ரம்ப் தனது உரையில், "எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகள், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஹார்முஸ் நீரிணையை ஈரானிடமிருந்து மீட்டுக்கொள்ளுங்கள். இல்லையெனில், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குங்கள்" என்று வலியுறுத்தினார்.
ஈரான்-இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்த பிறகு, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளது. உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் விநியோகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது. இதன் காரணமாக சர்வதேச எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன.ட்ரம்ப் மேலும் கூறியதாவது :ஈரான் வணிக எண்ணெய் டேங்கர்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதால் விலை உயர்கிறது.
அமெரிக்கா இந்தப் போரை விரைவில் (2-3 வாரங்களுக்குள்) முடித்துவிடும். ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது அமெரிக்காவின் பொறுப்பு அல்ல; எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளே அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
இந்தப் பேச்சுக்குப் பிறகு சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் விலையும் அதிகரித்து வருகிறது.ட்ரம்ப் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஹார்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் முக்கிய இலக்குகளை அழிப்போம் என்று முன்பே மிரட்டல் விடுத்திருந்தார். இப்போது அந்தப் பொறுப்பை பாதிக்கப்படும் நாடுகளுக்கு மாற்றியுள்ளார்.

