டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான இஷான் கிஷன், வலது காலில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு காயம் (Low-grade right adductor strain) காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதனால், இந்திய அணியின் 15 வயது இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு மீண்டும் ஆடும் லெவனில் (Playing XI) விளையாடுவதற்கான புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், இரண்டாவது போட்டி சனிக்கிழமையன்று கிறைஸ்ட்சர்ச் நகரின் ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் டி20 போட்டியின் போது இஷான் கிஷனுக்கு இந்தக் காயம் ஏற்பட்டதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. பிசிசிஐ மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முதல் போட்டியில் விளையாடாத இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போது இஷான் கிஷனின் விலகல் காரணமாக, சூர்யவன்ஷி மீண்டும் இந்திய அணியின் தொடக்க வீரராகக் களம் இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, கிளென் பிலிப்ஸின் அதிரடி ஆட்டத்தால் (40 பந்துகளில் 82 ரன்கள்) 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஃபின் ஆலன் 45 ரன்களும், பெவன் ஜேக்கப்ஸ் 31 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் (33 பந்துகளில் 67 ரன்கள்) மற்றும் அபிஷேக் சர்மா (12 பந்துகளில் 29 ரன்கள்) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தைத் தந்தது.
நடுவரிசையில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 122 ரன்களுக்கு 4 விக்கெட் எனச் சற்றுத் தடுமாறிய போது, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி 42 ரன்களும், அக்சர் படேல் 24 ரன்களும் எடுத்து அணியை மீட்டனர்.
இறுதியில் அதிரடியாக விளையாடிய நமன் தீர், வெறும் 15 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க, இந்திய அணி கடைசி ஓவரின் 4-வது பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. இந்தச் சூழ்நிலையில், நாளை நடைபெற உள்ள இரண்டாவது போட்டியிலும் வெற்றியைத் தொடர இந்திய அணியினர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

