வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹார்மூஸ் நீரிணை (Strait of Hormuz) அடுத்த 24 மணி நேரத்துக்குள் முழுமையாக திறக்கப்படாவிட்டால், ஈரானின் அனைத்து பாலங்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை தகர்க்கப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப், கூறுகையில் "முழு நாட்டையும் ஒரே இரவில் அழித்துவிட முடியும். அந்த இரவு நாளை இரவாகவும் இருக்கலாம்" என்று கூறினார். செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) இரவு 8 மணி (அமெரிக்க கிழக்கு நேரம்) வரை ஈரான் நீரிணையை திறக்காவிட்டால், "பாலங்கள் தகர்க்கப்படும், மின்சார நிலையங்கள் எரிந்து சிதைக்கப்படும்" என்றும் அவர் எச்சரித்தார். இது அவரது இறுதி எச்சரிக்கை என்றும், மேலும் நீட்டிக்கப்படாது என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹார்மூஸ் நீரிணை உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் மிக முக்கியமான கடல் வழி. ஈரான் இதை மூடியதால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் இதற்கு முன்பும் பல முறை காலக்கெடு விதித்து நீட்டித்து வந்த நிலையில், இம்முறை உண்மையான தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.
ஈரான் தரப்பு, 45 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தத்தை நிராகரித்துவிட்டு, நிரந்தர போர் முடிவு மற்றும் எதிர்கால தாக்குதல் உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளது. அமெரிக்க நிர்வாகத்தை நம்ப முடியாது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பும் ஈரானின் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை மற்றும் புரட்சிகர காவல் படை உளவுத்துறைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளை தாக்கியுள்ளது.
இந்த சூழலில், சிவில் உள்கட்டமைப்புகளைத் தாக்குவது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. ட்ரம்ப் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தவில்லை என்றும், ஈரான் மக்கள் "சுதந்திரத்துக்காக துன்பத்தை ஏற்க தயாராக உள்ளனர்" என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்க நிர்வாகத்தின் சில அதிகாரிகள் இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ட்ரம்ப் மட்டுமே இறுதி முடிவை எடுப்பார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.இந்த எச்சரிக்கை உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்மூஸ் நீரிணை மூடல் தொடர்ந்தால் உலக பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதால், அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

