டெல்லி : ஏர்டெல் (Airtel) நிறுவனம் தனது ப்ரீபெய்ட் கட்டண கட்டமைப்பில் (Prepaid Tariff Structure) அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை அந்நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளதுடன், சில முக்கியத் திட்டங்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.
நிறுவனத்தின் சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்குவது நீண்ட காலத்திற்கு லாபகரமானதாக இருக்காது என்பதால், கட்டண கட்டமைப்பைச் சீரமைக்கும் பணியில் ஏர்டெல் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ரூ. 299, ரூ. 319, ரூ. 579, ரூ. 619, ரூ. 649 மற்றும் ரூ. 799 ஆகிய பிரபலமான ரீசார்ஜ் திட்டங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பலரும் விரும்பிப் பயன்படுத்திய ரூ. 299 திட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ரூ. 349 புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நுழைவுக் கட்டணம் சுமார் 16 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, நீண்ட காலச் செல்லுபடியாகும் வகையில் இருந்த ரூ. 859 ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையும் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 899-ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏர்டெல்லின் இந்த திடீர் கட்டண உயர்வு மற்றும் குறைந்த விலைத் திட்டங்களின் நீக்கம் மொபைல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

