Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
த.வெ.க. உடன் கூட்டணியா? வைகோ சொன்ன பதில் என்ன?

த.வெ.க. உடன் கூட்டணியா? வைகோ சொன்ன பதில் என்ன?

சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்திருந்த நிலையில், இன்று முதலமைச்சருடனான இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைகோ முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.

முதலாவது கோரிக்கையாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எந்த வடிவிலும் மீண்டும் தமிழகத்திற்குள் வர அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். தாமிரத் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, 'Green Copper' உள்ளிட்ட புதிய பெயர்களில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுவதாக கூறிய வைகோ, அதற்கு தமிழக அரசு எந்த வகையிலும் அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்ட காலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்களின் சேதம் மற்றும் மக்களின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாகவும், இது தொடர்பான விரிவான ஆவணங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதலமைச்சரிடம் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஜூலை 2ஆம் தேதி தூத்துக்குடியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இரண்டாவது கோரிக்கையாக, கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது உரைகளை ஆறு தொகுதிகளாக வெளியிட உள்ளதாக வைகோ தெரிவித்தார். ஆகஸ்ட் 4, 2026 அன்று டெல்லியில் நடைபெற உள்ள வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு முதல் பிரதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறினார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "45 நிமிடங்கள் நேரம் ஒதுக்கி எனது கருத்துகளைக் கேட்ட முதலமைச்சருக்கு நன்றி. இந்த சந்திப்பு எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது" என்று தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவோமா? த.வெ.க.வுடன் இணைவோமா? என்பது பொதுக்குழுவில் தான் தெரிய வரும் என வைகோ விளக்கம் அளித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu