கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குமரி மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும், பல சாதனைகளைப் படைத்துள்ளதாகவும் அவர் பேசினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், "குமரி மாவட்டத்திற்கு நாம் பல்வேறு திட்டங்களை வழங்கி, பல சாதனைகளை செய்து காட்டியுள்ளோம். கண்ணாடி பாலம், மார்த்தாண்டம் தினசரி சந்தை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். பாலங்கள், சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்கள் மற்றும் கோவில்களின் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதி உதவியும் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும், "உங்களுக்காக இவ்வளவும் செய்த உரிமையோடும், உறவோடும் இன்று வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்" என்று மக்களிடம் உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.2026 சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசிய முதலமைச்சர், "இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சியில் அமர்த்த நீங்கள் ரெடியா? திராவிட மாடல் 2.0-க்கு குமரி மாவட்டம் ரெடியா?" என்று உற்சாகமாகக் கேட்டார்.
திருவாரூர், திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு குமரிக்கு வந்திருப்பதாகவும், அங்கு அனைவரும் தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார்."200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று திராவிட மாடல் நல்லாட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்றால், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நமது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்" என்று வலியுறுத்திய ஸ்டாலின், பின்னர் குமரி மாவட்டத்தில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
கன்னியாகுமரி தொகுதியில் திமுக மாவட்ட செயலாளர் ஆர். மகேஷ், நாகர்கோவில் தொகுதியில் திமுக துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின், கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் ராஜேஷ் குமார் (விடுதலைப் போராட்ட வீரர் குமரி கோமேதகம் பொன்னப்புரத்தின் பேரன்), குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கட்பத் (மீனவ பின்னணி கொண்டவர், தமிழ்நாடு காங்கிரஸில் முதல் பெண் மாவட்டத் தலைவர்), பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர். செல்வசாமி (மாவட்ட செயலாளர்), விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பிரவீன் ஆகியோரை அவர் அறிமுகப்படுத்தினார்.
இறுதியாக முதலமைச்சர் ஸ்டாலின், "இந்த ஆறு வேட்பாளர்களையும் வெற்றி பெற வைப்பீர்களா?" என்று மக்களிடம் உரத்த குரலில் கேட்டார். மக்கள் ஆரவாரத்துடன் "ஆம்" என்று பதிலளித்தனர். இதையடுத்து, "வெற்றி உறுதியாகிவிட்டது" என்று கூறி, வேட்பாளர்களை உட்கார அழைத்தார்.

