சென்னை : நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த முக்கிய தேர்தல் வழக்கில் இன்று காலை இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களம் உற்று நோக்கிய இந்த வழக்கில், தவெக வேட்பாளரின் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்த மனுவில், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் (VVPAT) இயந்திரங்களை முதற்கட்டமாகச் சரிபார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மீண்டும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிமன்றம், இன்று வழங்கிய தீர்ப்பில் கொளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் கோரிக்கையை முழுமையாக நிராகரித்து உத்தரவிட்டது.
மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட இந்த தேர்தல் வழக்கை முற்றிலும் தள்ளுபடி செய்வதாகத் தனது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம் கொளத்தூர் தொகுதியில் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் வெற்றி சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

