
பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனின் உறவினரான மருத்துவர் முருகானந்தம் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதே விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் எம்.பி சி.மகேந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
திருமண விழாவின் போது, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 20 நிமிடங்கள் விழாவில் இருந்த அவர்கள், மணமக்களை வாழ்த்திய பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். தமிழக அரசியல் சூழலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிமுகவினர் அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தவெக மற்றும் அதிமுகவினர், இது ஒரு தனிப்பட்ட திருமண விழா என்றும், அரசியல் நாகரிகம் மற்றும் நட்பின் அடிப்படையில் நடைபெற்ற சந்திப்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்றும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து தலைவர்கள் சந்தித்துக்கொள்வது இயல்பான ஒன்றுதான் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

