Monday, 13 Jul, 4.23 am giriblog

News
வந்தார்கள் வென்றார்கள் | மதன்

ஜூ னியர் விகடன் இதழில் ஆசிரியர் மதன் அவர்களால் எழுதப்பட்ட தொடர் 'வந்தார்கள் வென்றார்கள்'.

வந்தார்கள் வென்றார்கள்

வாசகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்ற புத்தகம். தொடராக வெளி வந்து பின்னர் விகடன் நிறுவனத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

மொகலாயர்கள் பற்றி மட்டுமே மதன் எழுதத் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால், முதல் வாரமே வாசகர்களிடையே வரவேற்பை பெற்றதால், ஆசிரியர் குழுவால் துவக்கத்தில் இருந்து அதாவது மொகலாயர்கள் ஆட்சிக்கு முன்பு இருந்து எழுதக்கூறி மதனால் எழுதப்பட்ட தொடர்.

முகமது கோரி

கிபி 1000 வாக்கில் இந்தியாவின் மீதான மற்ற நாடுகளின் போரை முதலில் ஆரம்பித்து வைத்தவர் முகமது கோரி. அப்போது ஆண்ட ரஜபுத்திரர்களைத் தோல்வியடையச் செய்தார்.

ரஜபுத்திரர்களைக் கொன்று அரண்மனையைக் கைப்பற்றிய போது அங்கே இருந்த ரஜபுத்திர பெண்கள் நூற்றுக்கணக்கானோர் தீக்குளித்து உயிரிழந்தனர்.

சிறுவயதில் இருந்தே போராட்ட குணத்துக்குப் பெயர் பெற்றவர்கள் ரஜபுத்திரரர்கள். வெற்றி அல்லது வீர மரணம் மட்டுமே இவர்கள் கொள்கை.

கஜினி முகமது

கஜினி முகமது என்றால், அனைவருக்கும் நினைவுக்கு வருவது 16 முறை தோல்வியடைந்து 17 வது முறை வெற்றி பெற்றார் என்பது.

முயற்சிக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் கஜினி முகமது படையெடுப்புச் சொல்லப்படுகிறது ஆனால், இவர் ஒவ்வொருமுறையும் படையெடுத்து இந்தியாவின் செல்வங்களைக் கொள்ளையடித்து உள்ளார்.

17 வது படையெடுப்பில் கொடூரமான படுகொலைகள், கொள்ளை நடந்துள்ளன.

சோமநாதர் சிவன் கோவில்

குஜராத்தின் தென்கோடியில் உள்ள சோமநாத் நகருக்குள் கஜினியின் ஆப்கான் படை புகுந்து, அங்கே இருந்த மிகப்பிரபலமான சோமநாதர் என்று வழிபடப்பட்ட சிவன் கோவிலைச் சூறையாடியது.

திருவிழாக்காகக் கூடியிருந்த பக்தர்கள் எதிர்த்ததால், கஜினியின் ஆணையில் 50,000 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டு ரத்த ஆறு ஓடியது. சிவன் சிலை உடைக்கப்பட்டுக் கோவில் சிதைக்கப்பட்டது.

பலராலும் கொடுக்கப்பட்ட, தங்கம் வைரம், வைடூரியம், இரத்தின கற்கள், முத்து, பவளம், விக்கிரகங்கள் என ஆறு டன் செல்வத்தைக் கொள்ளையடித்து ஆப்கான் (காபூல்) கொண்டு சென்றான்.

அரசனை போல அல்லாமல் கொள்ளைக்காரனை போல கஜினி நடந்து கொண்டதாக வரலாற்று ஆசியர்கள் இச்சம்பவத்தை விவரித்துள்ளார்கள்.

இதைப்படித்த பிறகு கஜினி மீது இருந்த மதிப்பு முற்றிலும் போனது.

தைமூர்

கருணை என்பதே முற்றிலும் இல்லாத கொடூரமான மன்னனாகத் மங்கோலிய மன்னன் தைமூர் இருந்துள்ளான். நாடோடி மன்னனாக இருந்த தைமூர், நாட்டைக் கைப்பற்றி ஆட்சி புரிவது அவனது விருப்பமல்ல.

தொடர்ந்து போரிட்டு அனைத்து நாடுகளையும் வெற்றி பெற்றுக்கொண்டே இருப்பதே அவன் விருப்பம்.

இந்தியாவில் போரிட்டு அப்போது இருந்த சுல்தானை வெற்றி பெற்று, டெல்லியில் இருந்த பெரும்பாலானவர்களைக் காரணமே இல்லாமல், வெட்டிக் கொன்றுள்ளான்.

கருணையா.. அப்படின்னா?

தைமூரை பொறுத்தவரை தலையும் முண்டமும் தனித்தனியாக இருந்தால் மட்டுமே அவர்கள் ஆபத்தில்லாதவர்கள். எனவே, கருணைக்கு இடமில்லை.

ஒரு லட்சம் பேரைக் கைதிகளாகப் பிடித்து வைத்து இருந்த போது, சிலர் எதோ காரணத்துக்காகச் சிரித்தனர்.

கோபமடைந்த தைமூர் தன்னைப் பார்த்துச் சிரித்ததாகக் கருதி, ஒரு லட்சம் பேரையும் உடனே வெட்டிக்கொல்ல ஆணையிட்டான் என்றால், எவ்வளவு கொடூரமான நபர் என்று புரிந்து கொள்ளலாம்.

வரலாற்றிலேயே தைமூரே மிகக் கொடூரமான அரசனாக அறியப்படுகிறார்.

இந்தியா மீது ஏன் போர்?

எல்லோருக்கும் இந்தியா மீது ஏன் குறி என்றால், இந்தியாவின் அளவற்ற வளம்.

எனவே, இந்தியாவின் வளத்தைப் பற்றி வியாபாரிகள் கூறுவதைக் கேட்பவர்கள் இந்தியாவின் மீது படையெடுத்துக் கொள்ளையடிக்க முடிவு செய்தார்கள்.

முஸ்லீம் நாடுகளில் வறட்சியான பகுதியையே கண்டதாலும், வளம் மிகுந்த இந்தியா அவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டியதில் வியப்பில்லை.

டெல்லி

முகமது கோரி போருக்குப் பின் பல்வேறு முஸ்லீம் அரசர்கள் தொடர்ச்சியாகப் போர் தொடுத்து டெல்லியை கைப்பற்றினார்கள். டெல்லி தான் மையமாக இருந்துள்ளது. டெல்லியை கைப்பற்றினால் இந்தியாவைக் கைப்பற்றிய மாதிரி.

அதோடு ஆப்கான் மற்றும் மற்ற முஸ்லீம் நாடுகள் வட பகுதியில் தான் அதிகம் இருந்ததால், இந்தியாவின் வடக்குப்பகுதியே போரால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படையெடுப்பின் போதும் நூற்றுக்கணக்கான கோவில்கள் அழிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

மொகலாயர்களுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் 'டெல்லி சுல்தான்' என்றும், பாபர் முதல் அனைவரும் 'டெல்லி பாதுஷா' என்றும் அழைக்கப்பட்டனர்.

மொகலாயர் பெயர்க்காரணம்

தைமூர் பரம்பரை வழியில் வந்த (துருக்கி) தந்தைக்கும், மங்கோலிய பரம்பரையில் வந்த தாய்க்கும் பிறந்தவர் பாபர். 'மொகல்' என்றால், மங்கோலியர் என்று பொருள். எனவே, இதிலிருந்து மொகலாயர்கள் பெயர் வந்தது.

தாய் வழி வந்த நாடோடிகளான மங்கோலியர்கள் பெயரில் பாபருக்கு மதிப்பில்லை, தந்தை வழி மீதே மதிப்புக்கொண்டு இருந்தார்.

எனவே, அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவருக்குப் பின் வந்த தலைமுறை, மொகலாயர்கள் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டது.

பாபர்

மிகச்சிறு (12 / 13) வயதிலேயே பொறுப்புக்கு வந்து, பல போராட்டங்களை கடந்து மிகப்பெரிய மொகலாயச் சாம்ராஜ்யத்தைப் பாபர் அமைத்தார்.

பாபர் -> ஹிமாயூன் -> அக்பர் -> ஜஹாங்கீர் -> ஷாஜஹான் -> ஒளரங்கசீப் என்ற முறையில் மொகலாய ஆட்சி அமைந்துள்ளது.

இவர்கள் அல்லாமல் சிலரும் ஆண்டுள்ளார்கள் ஆனால், அவர்கள் ஓரிரு ஆண்டுகளே ஆண்டுள்ளார்கள். வரலாற்றில் குறிப்பிடும் அளவுக்குச் சாதனைகள் புரியவில்லை.

அக்பர் மற்றும் ஒளரங்கசீப் மட்டுமே 50+ ஆண்டுகள் ஆண்டுள்ளனர். இதில் அக்பர் மட்டுமே சிறப்பான ஆட்சியை வழங்கியுள்ளார்.

அக்பர்

மொகலாய ஆட்சியிலேயே அனைவராலும் விரும்பப்பட்டவரும், அதிகம் பிரச்சனை இல்லாமல் ஆட்சி புரிந்தவருமாக அக்பர் உள்ளார்.

இதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது, இந்துக்களை அரவணைத்துச் சென்றது.

அனைத்து முஸ்லீம் அரசர்களும் இந்துக்களைப் பகைத்தும், கூடுதல் வரிகளை விதித்தும் இந்துக்களை எதிர்த்ததால், பல பகுதிகளிலும் இருந்து அவ்வப்போது நடந்த போர்கள், கலவரம் காரணமாக ஆட்சியைச் சரிவர நடத்த முடியவில்லை.

ஆனால், இந்துக்களைப் பகைத்துக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது என்பதை உணர்ந்த அக்பர் இதை மாற்றியதால், எந்தப் பெரிய பிரச்சனைகளும் இல்லாமல் சிறப்பான ஆட்சியைக் கொடுத்துள்ளார்.

ஜிஸ்யா (தீர்த்த யாத்திரை) வரி

இந்துக்கள் மீது விதித்த 'ஜிஸ்யா' (தீர்த்த யாத்திரை) வரியை நீக்கியத்துக்காக இந்துக்கள் கொடுத்தப் பட்ட பெயர் அக்பர் என்று ஜோதா அக்பர் திரைப்படத்தில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால், இந்நாவலில் துவக்கத்தில் இருந்தே அக்பர் என்றே அறியப்பட்டதாக உள்ளது. எது உண்மை என்று தெரியவில்லை.

தீன்-இலாஹி

சன்னி பிரிவைச் சார்ந்த அக்பர், அனைத்து மதங்களையும் அங்கீகரித்தார். ஒரு கட்டத்தில் கடவுளே இல்லாத மதமான தீன்-இலாஹி என்ற மதத்தை உருவாக்கினார் ஆனால், அம்மதம் அவர் காலகட்டத்தோடு முடிந்து விட்டது.

இதைத்தொடர்ந்து நாணயங்களில் 'அல்லாஹீ அக்பர்' என்று பொறித்தது, முஸ்லீம் மதக் குருமார்களைக் கடுப்படைய வைத்தது.

எல்லாம் வல்ல இறைவனா? அல்லது அக்பரே இறைவன்! என்று மன்னர் சொல்ல நினைக்கிறாரா என்று பதறினார்கள்.

தற்போது அல்லாஹீ அக்பர் என்று முஸ்லிம்கள் கூறுவது அக்பரையும் உள்ளடக்கியா? நபிகளை மட்டுமா? நபிகளை என்றால், அக்பர் எப்படி வந்தது? அக்பர் என்றால் எல்லாம் வல்ல இறைவன் என்ற அர்த்தத்திலா?

ஒளரங்கசீப்

மிகைத்திறமையானவராக இருந்தாலும், தொடர்ச்சியாக இந்துக்கள் எதிர்ப்பைச் சம்பாதித்ததால், இந்துக்களுக்கு எதிராகச் செயல்பட்டதாலும், இவரின் காலத்துக்குப் பிறகு மொகலாயர் ஆட்சி முடிந்து பிரிட்டிஷ் ஆட்சி (கிபி 1600+) துவங்கியது.

ஒளரங்கசீப்க்கு பிறகு வந்தவர்கள் திறமையற்றவர்கள் என்பதும் முக்கியக் காரணம்.

அதோடு ஒளரங்கசீப் காலத்தில் மராட்டிய மன்னன் சிவாஜியின் குடைச்சல் பெரிய அளவில் அவருக்கு இருந்தது.

மற்ற இந்திய மன்னர்கள் சிறு அளவில் இருந்தால் போதும் என்று சுருக்கிக்கொண்ட போது, சாம்ராஜ்யம் அமைக்க வேண்டும் என்று முயன்ற மன்னன் சிவாஜி.

தென் இந்தியா

சுல்தான், பாதுஷா படையெடுப்புகளால் தென் இந்தியா பெருமளவில் பாதிக்கப்படவில்லை குறிப்பாகத் தமிழகம் மற்றும் கேரளா.

இதற்கான காரணம் கூறப்படவில்லை.

தென்கோடி வரை வருவது தொலைவாக இருக்கும் என்பது காரணமாக இருக்கலாம்.

ராஜேந்திர சோழன்

மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்துக்கொண்டு இருந்த ராஜேந்திர சோழன், கஜினி முகமதுவுடன் மோத வேண்டியது (கிபி 1000+).

ஆனால், அவருக்கு மலேசியா, இந்தோனேசியா போன்று கடல் தாண்டிச் சென்று நாடுகளை வெற்றி பெறும் ஆவல் இருந்ததால், கஜினி மீது ராஜேந்திர சோழன் போர்தொடுக்கவில்லை. வேறு நாடுகளுக்கு சென்று விட்டார்.

இப்போர் நடந்து இருந்து இருந்தால், ஒருவேளை வரலாறே மாறி இருக்கலாம்.

ஏனென்றால், சோழப்பேரரசு இந்தியாவைத் தாண்டிப் பல நாடுகளைக் கைப்பற்றியதை வரலாற்றில் காணலாம். மிக பலம் வாய்ந்தது சோழப்படையாகும்.

இந்தியா ஏன் பாதிக்கப்பட்டது?

சாதி, பொறாமை, ஒற்றுமையின்மையால் மட்டுமே இந்தியா மற்றவர்களிடையே ஆட்சியை இழந்தது.

அதோடு, இருப்பதே போதும் எண்ணியதாலும், சிவாஜி, ராஜேந்திர சோழன் போலச் சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டும் என்று எண்ணாததாலும் தோல்வியடைந்தனர்.

இவர்களுக்குப் பிறகு வந்த பிரிட்டிஷாரும் இதே வழியைப் பின்பற்றி இந்தியாவை அடிமைப்படுத்தினர்.

பலரும் நம் நாட்டைக் குறிவைக்ககாரணமே நம் நாட்டில் இருந்த அளவற்ற செல்வம் மற்றும் வளம். அள்ள அள்ள குறையாத செல்வம்.

ஏன் இந்தியா ஒரு அதிசய நாடு?!

600+ ஆண்டுகள் முஸ்லீம் மன்னர்கள் ஆண்டும், எவ்வளவோ முயன்றும் இந்தியாவை முஸ்லீம் நாடாக மாற்ற முடியவில்லை.

இதைச் சரியாக உணர்ந்து ஆட்சி புரிந்தவர் அக்பர் மட்டுமே!

ஒவ்வொரு படையெடுப்பின் போதும் பல கோடி செல்வங்கள் டன் கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டன ஆனாலும் இந்தியா ஒன்றும் ஆகவில்லை.

பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், அப்போதும் ஒன்றும் ஆகவில்லை.

இதன் பிறகு பிரிட்டிஷார் வந்து ஏராளமாகக் கொள்ளையடித்து 300+ ஆண்டுகள் இங்கிலாந்து கொண்டு சென்றனர். அப்போதும் ஒன்றும் ஆகவில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்று மக்களாட்சி முறை வந்து தற்போதும் அரசியல்வாதிகள் கொள்ளையடித்து வருகிறார்கள் ஆனால், இந்தியா வளர்ந்து கொண்டே உள்ளது.

இது அதிசயம் தானே!

கொள்ளைடித்துச் சேர்த்தும் உதவவில்லை

இந்தியாவைப் பல நூறு முறை கொள்ளையடித்துச் சென்ற ஆப்கான் மற்றும் மற்ற நாட்டு மன்னர்களின் நாடுகள் தற்போது மோசமான நிலைமையில் உள்ளன.

எடுத்துக்காட்டுக்கு ஆப்கான் தற்போது என்ன நிலைமை என்று அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் கொள்ளையடித்து எடுத்துச் சென்று காபூலை மேம்படுத்தினார்கள் ஆனால், தற்போதைய காபூல் நிலைமை என்ன?

ஏராளமான நாடுகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம் ஆனால், இந்தியா இத்தனை அழிப்பு, சிதைப்புக்கும் பிறகும் உயர்ந்து நிற்கிறது.

ஒருவர் உருவாக்கிய சாதனத்தைத் திருட முடியும் ஆனால், அறிவைத் திருட முடியாது. அது இந்தியாக்கு பொருந்தும்.

மதன்

மதன் மிகச்சிறப்பாக, சலிப்புத் தட்டாமல் வந்தார்கள் வென்றார்கள் எழுதியுள்ளார்.

படையெடுப்புகளில் ஒரே மாதிரியான சம்பவங்களே இருக்கும், கொல்லுவது, கொள்ளையடிப்பது, சூறையாடுவது என்று இவையே இருக்கும்.

குறிப்பாக ஒரே மாதிரியான சம்பவங்கள் தொடரும் போது படிக்கச் சலிப்பாகலாம் ஆனால், அவ்வாறு இல்லாமல் சுவாரசியமாக எழுதியுள்ளார்.

இந்நாவலை எழுத ஏராளமான புத்தகங்களைப் படித்துக் குறிப்புகள் எடுத்துள்ளார்.

வியக்காமல் இருக்க முடியவில்லை. வருடங்கள், நாட்கள், ஓவியங்கள் என்று கடுமையான உழைப்புள்ளது. படித்தவர்கள் இதை உணர முடியும்.

விமர்சனத்தில் மேலோட்டமாகவே குறிப்பிட்டுள்ளேன், இதுவே மிகப்பெரிய கட்டுரையாக வந்து விட்டது. இன்னும் சிலவற்றைக் குறிப்பிட நினைத்தேன் ஆனால், கட்டுரையின் அளவு காரணமாக முடியவில்லை.

அமேசானில் வாங்க -> வந்தார்கள் வென்றார்கள் Link . Amzon Prime ல் இலவசம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Giri Blog
Top